எங்களால் முடியும் என்பதை ஆண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்
இலங்கை அரசியலில் மகளிர் பங்களிப்பு:
பெண்கள் மீதான வன்முறைகள், பலாத்காரங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில் சட்டமியற்றும் அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டிய அவசியம் பரவலாக வலியுறுத்தப்படுகின்றது.
இலங்கை போன்ற சனத்தொகையில் 52 சதவீத பெண்களைக் கொண்ட நாடொன்றில் சட்டமியற்றும அதிகார நிலையில் பெண்களின் பங்களிப்பு புறக்கணிக்கத்தக்க அளவில் இருப்பது கவலைக்குரியது.
உலகின் முதல் பெண் பிரதமரைக் கொண்ட நாடு என்று பெருமை பேசிக்கொண்டால் பாராளுமன்றத்தில் இதுவரை 10 சதவீதத்திலும் குறைவான பெண் பிரதிநிதித்துவத்தையே நாம் கொண்டிருக்கின்றோம். நாடு சுதந்திரமடைந்து 62 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து, ஆழமாகவும் ஆக்கபூர்வமாகவும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
ஆசிய நாடுகளில் பெண்களின் அரசியல் பிரவேசமென்பது, அரசியலில் ஈடுபட்டிருந்த அவள் சார்ந்த ஆணின் மறைவுக்குப் பின்னரேயே இடம்பெற்றிருக்கின்றது. ஆசிய நாடுகளில் நாட்டின் தலைமைப் பதவியில் இருந்த பெண் அரசியல் தலைவிகளான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, இந்திரா காந்தி, பெனாஸிர் பூட்டோ, சந்திரிகா பண்டாரநாயக்க என்று செல்லும் பட்டியலில் உள்ளவர்கள் எல்லோரும் தமது கணவனின் அல்லது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அரசியல் நீரோட்டத்தில் இணைந்தவர்கள்.
இலங்கையின் வரலாற்றில் பெண்ணொருவர் முதன் முதலில் சட்ட சபைக்குத் தெரிவு செய்யப்பட்டது 1931 இல் தனது தந்தை ஜோன் ஹென்றி அதிகாரத்தின் மரணத்தைத் தொடர்ந்து, 1931 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இடைத் தேர்தலில் ருவன்வெல்ல தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு, 9983 மேலதிக வாக்குகளால் சட்டசபைக்குத் தெரிவானார் அடலீன் மொலமுறே.
இவரும் தனது கணவரின் அடிச் சுவட்டைப் பின்பற்றி அரசியலில் நுழைந்தவர். தனது கணவரின் மரணத்தை தொடர்ந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசியலில் நுழைந்தார். 1961 இல் இலங்கையின் பிரதமரானார். உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார். இவர்களைப் போன்றே பின்னர் அரசியலில் நுழைந்த சந்திரிகா பண்டாரநாயக்க, ஸ்ரீமா திசாநாயக்க, சுமேதா ஜி. ஜயசேன, சுபாஷினி பெர்னாண்டோ புள்ளே என எல்லோரும் தமது கணவனோ அல்லது தந்தையினதோ இழப்பைத் தொடர்ந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான். ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர.
1931 இல் பெண்கள் வாக்குரிமை பெற்றுக்கொண்ட போதும் வாக்களிப்பில் அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமை பிரதிநிதித்துவத்தில் வழங்கப்படவில்லை. 1947 இல் முதலாவது பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 3 சதவீதமாக இருந்திருக்கிறது. இற்றைக்கு ஏறத்தாழ 60 வருடங்களுக்குப் பின்னர் இது 6 சதவீதமாக மட்டுமே உயர்ந்திருக்கின்றது.
இலங்கையில் 89 சதவீதமான பெண்கள் கல்வியறிவு கொண்டவர்கள். பல்கலைக் கழகங்களில் பயில்வோரில் 69 சதவீதமானவர்கள் பெண்கள், வழக்கறிஞர்களில் 40 சதவீதமானவர்கள் பெண்கள். அரச நிர்வாகத்துறையில் 25.7 சதவீதமான பெண்கள் இருக்கிறார்கள். மருத்துவத்துறையில் 43.4 சதவீதமானவர்கள் பெண்கள், ஆசிரியத்துறையில் பெண்கள் 63.9 சதவீதம்.
ஆனால் 2009 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, பெண்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் 5.8 சதவீதமே. மாகாண அமைச்சர்களாகப் பெண்கள் எவருமே பதவி வகிக்கவில்லை. மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5 சதவீதமாக இருக்கின்றது. ஒரேயொரு பெண் ஆளுநராகவிருக்கின்றார். உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 03 சதவீதமாக இருக்கையில், நகர சபைகளில் அது 3.4 சதவீதமாகவும், பிரதேச சபைகளில் 1.6 சதவீதமாகவும் இருக்கின்றது.
அமைச்சுக்களின் செயலாளர்களில் 8.9 சதவீதமானவர்கள் பெண்கள், 16 சதவீதமாக மேலதிகச் செயலாளர்கள் பெண்கள். 22.9 சதவீதமான அரச அதிபர்கள் பெண்கள். இன்னொருவகையில் சொல்லப் போனால், கணவனால் அல்லது தந்தையால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்புபவர்களாகவே பெண்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் பெண்களின் அரசியல் பங்களிப்பு சமீபகாலங்களில் அதிகரித்திருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெண்கள் அதிகளவில் வாக்களித்ததாகப் புள்ளிவிபரங்கள் கூறு கின்றன. வாக்களிப்பில் மாத்திரமல்ல, உள்ளூராட்சி தேர்தல்கள் முதற்கொண்டு தேர்தல் பிரசாரப் பணிகளில் பெண்களின் பங்களிப்பும் அளப்பரியதாக இருக்கின்றது. ஆனாலும் இதேபோல அரசியலில் அதிகார மட்டங்களில் பெண்களைக் காண முடிவதில்லை.
இதற்கு முக்கிய காரணம், அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படாமைதான். குறிப்பாகப் பிரதான கட்சிகளில் பெண்களை வேட்பாளர்களாகத் தெரிவு செய்யும் வீதம் மிகவும் குறைவானதாக இருக்கின்றது. பெண்கள் தேர்தல்களில் வெற்றிபெற மாட்டார்கள் எனக் கூறியே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுகையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.
தென்னாசியாவிலேயே, அரசியலில் பெண்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையிலான சட்ட ஏற்பாடுகளோ, இட ஒதுக்கீடுகளோ இல்லாத ஒரேயொரு நாடு இலங்கை மாத்திரமே.
உள்ளூராட்சி மட்டங்களில், பெண்கள் அதிகளவில் அரசியலில் ஈடுபாடு காட்டி வந்தாலும், தேர்தல்களில் ஆண்களே வெல்வார்கள் என்ற எண்ணப்பாங்கினால், அரசியலில் ஈடுபட விருப்பமுள்ள பெண்களுக்கும் அதற்கான சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகின்றன. இந்நிலையில் வேட்பு மனுதாக்களின் போதாவது, பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பெண்கள் அமைப்புகளும், பெண்களின் உரிமை களில் அக்கறை கொண்டுள்ள நிறுவனங்களும் கடந்த 10 வருடங்களாக பிரயத்தனம் செய்து வந்துள்ளன.
இது தொடர்பிலான தமது முன்மொழிவுகளை அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தேர்தல் சீர்திருத்தத்துக்கான பாராளுமன்றத் தேர்வுக் குழு ஆகியோரிடம் இவர்கள் சமர்ப்பித்துள்ளார்கள்.
பெண்களும் ஊடகமும், இலங்கையின் தாய்மாரும் மகள்மாரும், விழுது, பெண்கள் அபிவிருத்தி நிலையம், பெண்கள் வள நிலையம், ஊவாவெல்லஸ்ஸ விவசாயப் பெண்களின் அமைப்பு என்பன இணைந்து தேர்தல் சீர்திருத்தத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பில் உள்ளடக்கப்ப டவேண்டிய அம்சங்கள் பற்றிய முன்மொழிவுகளைச் செய்துள்ளன.
இலங்கையின் உள்ளூராட்சித் தேர்தல் முறையை திருத்தங்கள் செய்வதற்கான சட்ட மசோதா விரைவில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருக்கின்றது.
2011 இல் நடாத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தல்களும், புதிய சட்டத்துக்கு அமைவாகவே நடைபெறும்.
அரசியலில் பெண்களின் பங்களிப்பை உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து ஆரம்பமாக்கும் முகமாகவே உள்ளூராட்சி மன்றங்களில் இட ஒதுக்கீடு கோரும் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்முன்மொழிவுகளின் பிரகாரம், உள்ளூராட்சி வட்டாரங்களின் மூன்றில் ஒரு வட்டாரங்களுக்கும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் 50 சதவீத பிரதிநிதித்துவத்துக்கும் தேர்தல் முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றது.
‘பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான பிரசாரம்,’ எனும் அமைப்பு இது தொடர்பில், நாடு முழுவதிலும் இருந்து 80,000 கையொப்பங்களைப் பெற்றுள்ளது. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பில் சகல மட்டங்களிலும் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி தேர்தல்களில் திருத்தங்களைச் செய்வதற்கான மசோதாவில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக் கோரிக்கை பற்றிய செய்தியாளர் மாநாடு அண்மையில் ரேணுகா ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில், பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது பற்றி, ஜனாதிபதி தனது 2005 ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
அரசியலில் பெண்களுக்கு சம வாய்ப்பை வழங்குவதன் மூலமே ஊழலற்ற, வன்முறையற்ற சமூகமொன்றை உறுதி செய்யலாம். அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்போது அது நம் சிக்கலான சமூக அமைப்பிலும் சாதகமான மாற்றங்களை உண்டுபண்ணும் என்பதால், பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களில் திருந்தங்களைச் செய்யும் மசோதாவில், பெண்களின் அரசியல் இடஒதுக்கீட்டுக் கோரிக்கைகளும் உள்வாங்கப்பட வேண்டும் என்று பெண்கள் அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றன.
sukisiva2009@yahoo.com
வாசுகி சிவகுமார்... -
No comments:
Post a Comment